கசாகூளம்

ரிச்சர்ட் லிங்க்லேட்டர்

மே 14, 2008 · 7 மறுமொழிகள்

ரிச்சர்ட் லிங்க்லேட்டர் என்ற பெயர் “ஸ்கூல் ஆஃப் ராக்” படம் பார்த்த போது தான் எனக்கு அறிமுகம். ஜாக் ப்ளாக்கும் சில வாண்டுகளும் சேர்ந்து ராக் இசைக்குழு ஆரம்பிக்கும் கதையினை ஜாலியாக எடுத்திருந்தார். ஒரிரு பிங்க் ஃப்ளாய்ட், வீ வில் ராக் யூ தவிர வேறு ஏதும் தெரியாத ராக் இசை அறிவிலியான எனக்கு ராக் ஹிஸ்டரி, பங்க், சைக்கடெல்லிக், ஆன்க்கோர் ( அப்படீன்னா ஃப்ரெஞ்ச்சில் ஒன்ஸ்மோர் ) போன்ற பதங்களை உதிர்க்க மிக எளிமையாக அறிமுகம் செய்திருந்தார். மேலும் இவரோட பெயர் சென்ஸஸ் ஆஃப் சினிமாவில் இடம் பெற்றிருந்தது. இதில் வந்தால் பெரிய பருப்பான இயக்குநர் என்று கேள்விப்பட்டு, மற்ற படங்களை தரவிரக்கம் செய்ய ஆரம்பித்தேன்.

Before Sunrise - வியன்னாவில் காலை எட்டு மணிக்கு ஸ்டீஃபன் தேவாலயத்தில் ஆரம்பித்தால், ஸிஸ்ஸி அருங்காட்சியகத்தில் தங்கத்தால் ஆன ஜட்டி தவிர மற்றது எல்லாம் இருப்பதை வாய்பிளந்து ரசித்துவிட்டு, ஸ்பானிஷ் குதிரையேற்ற பள்ளியில் குதிரை சாணி போடும் காட்சிகளை அறுபது யூரோ கொடுத்து பார்த்துவிட்டு, மதியம் நான்கு யூரோவில் பீட்ஸா மற்றும் கோக் குடித்துவிட்டு, பொடிநடையாக அங்கிருக்கும் மற்ற சில கடியான அருங்காட்சியகத்திற்கு சென்று விட்டு, அருகே உள்ள மாளிகை முன் நின்று ஆர்க்குட் ஆல்பத்தில் போட சில படங்களை எடுத்துக்கொண்டு, அங்குள்ள கடைவீதிகளில் இந்தியன் ரெஸ்த்தோரந்தில் “தால்-வாங்கினால்-சாதம்/சப்பாத்தி-இலவசம்” சாப்பிட்டுவிட்டு, வேகவேகமாக ரயிலேருவது தானே map-marking செய்யும் நமது “வெளிநாட்டு சுற்றுலா” பழக்கம்.

இதையெல்லாம் செய்யாமல், ரயிலில் சந்திக்கும் ஜேம்ஸ்-செலினா என்ற ஜோடி வியன்னாவில் ஒரு நாள் என்ன செய்கிறார்கள் என்பதை அழகாக காட்டியுள்ளார். நிஜ வாழ்க்கைக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறது இந்த திரைக்கதை. தனக்கு பிடித்தது, தனது பால்ய பருவம், தன் எண்ணங்கள் என இருவரும் சுவையாக பேசிக்கொண்டே இருப்பதை ஒரு voyeurஆக பார்க்கும்போது, ஏதாவது ஆங்கிலம் தெரிந்த ஐரோப்பா ஃபிகர் கிடைத்தால் இப்படித் தான் மடக்கனுமோ என்று தோன்றுகிறது (தமிழ்நாட்லயே ஒரு வழியும் காணோம் - மனசாட்சி). வெறும் உரையாடல்களை வைத்தே இவ்வளவு சுவாரஸ்யமாக படம் எடுக்கமுடியுமா என்று வியப்பாக இருக்கிறது. செலினாவாக வரும் ஜூலி டெல்ப்பி எளிமையாக ஆனால் கொள்ள்ள்ளை அழகாக இருக்கிறார். இறுதி க்ளிஷே: இரு நடிகர்களும் கதைமாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். லிங்க்லேட்டரின் மற்றோரு படமான Before Sunset அடுத்த வாரம் பார்க்கவேண்டிய பட்டியலில் முதலிடம். (தல சன்ரைஸ்ஸைவிட சன்செட் சூப்பர்ன்னு வேற சொல்லிட்டாரு)

அடுத்த முறை ஐரோப்பா செல்லும் போது ரயிலடிகளிலும், பூங்காக்களிலும் ஈருடல் ஒருமுகமாக இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் பொறாமை வராது, புன்னகை தான் பொறாமை மட்டும் வராது, புன்னகையும் தான்.

பின்குறிப்பு: இந்த படத்தில் வரும் காட்சி எந்த தமிழ் படத்தில் வந்துள்ளது என்று சரியாக பதில் கூறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, கனவில் ஜூலி டெல்ப்பி வந்து அருள்பாலிப்பாராக !

→ 7 Commentsபகுப்புகள்: பயாஸ்கோப்பு
குறிச்சொல்லிடப்பட்டது:

March of the Penguins

மே 5, 2008 · 1 மறுமொழி

சமீபகாலமாக விவரணை படங்கள் மீது எனக்கு காதல்.   அதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். எனக்கு மிகவும் பிடித்த, மனதை தைத்து நின்ற “March of the Penguins“ல் துவங்குகிறேன்.

அண்டார்ட்டிக்காவில் பென்குவின்களோடு பென்குவின்களாக ஒன்பது மாதம் எலும்பை ஒடிக்கும் கடும்குளிரில் வாழ்ந்து படம்பிடித்துள்ளனர். நூற்றுக்கணக்கான் எம்ப்பரர் பென்குவின்கள் ஒரு இடத்தில் குவிந்து, அவைகள் தன்னுடைய துணையினை தேர்ந்தெடுத்து, குழந்தை ஈன்று, பிரிந்து செல்லும் ஒரு காதல் கதையினை அருமையாக பதிந்துள்ளனர்.

பருந்துகள் அண்டாத, பனிக்கட்டிகள் சீக்கிரம் உடையாத, கடலில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய தீவில் அனைத்து பென்குவின்களும் கூடுகின்றன. ஆண்களும் பெண்களும் இரண்டு மாதம் தத்தம் துணையினை தேர்ந்தெடுத்து காதல் செய்து முட்டை போடுகின்றது. அந்த முட்டை பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்து போகக்கூட்டும். அதை தன்னுடைய காலுக்கும் தொப்பைக்கும் நடுவில் வைத்து வெதுவெதுப்பாக வைத்திருக்கிறது பெண். முட்டை வந்தவுடன் மிகக் கவனமாக (பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்துவிடும்), ஆணிடம் அதை ஒப்படைத்துவிட்டு இரை தேடி நூறு கிலோமீட்டர் தொலை பயணம் மேற்கொள்கிறது. அதுவரை கடுங்குளிரிலும், பனிப்புயலிலும் முட்டையினை உண்ணாவிரதம் செய்துகொண்டே (முட்டையினை தன் தொப்பைக்கும் காலுக்கும் நடுவில் சுமந்து வெகு தூரம் செல்ல ஏலாது) அடைகாத்துக் கொண்டிருக்கிறது ஆண்.

இரண்டு மாதம் கழித்து, மீன்களை தன் வயிற்றில் நிரப்பிக்கொண்டு, தன் கணவனையும் குழந்தையினையும் தேடிக்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான பெண்களை, அதனுடைய குரலினை வைத்தே கண்டுபிடித்துவிடுகிறது. அதற்குள் முட்டை பொறிந்து குட்டி பசியோடு தயாராக இருக்கிறது. தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு தன் உண்ணாவிரதத்தை முடிக்க நூறு மைல் தாண்டி செல்கிறது ஆண்.

தன் வயிற்றில் இதுவரை தேக்கி வைத்திருந்த உணவினை தன் குட்டிக்கு தந்து, குளிரில் தன் குட்டியினை இழந்த கோபமான அம்மா பென்குவின்களிடமிருந்தும், இரைதேடி அலையும் பருந்துகளிடமிருந்தும் தன் குட்டியினை காப்பாற்றி, உண்ணாவிரதத்தினை முடித்துவிட்டு வரும் தந்தையினை அதனுடைய குரல் மூலம் அடையாளம் காட்டி, நன்றாக நடக்க ஆரம்பித்தவுடன் “ராஜா, இனிமேல் பொழச்சுக்கவேண்டியது உன் சாமார்த்தியம்” என்று தன்னுடைய பயணத்தை தொடரும் இந்த பென்குவின்களின் கதைக்கு முன்னாடி மற்ற கதையெல்லாம் சப்பை. தன்னுடைய பெருத்த உடலினை இருபக்கமும் ஆட்டிக்கொண்டும், சில சமயம் தன் தொப்பை மூலம் பனியில் சறுக்கிக் கொண்டும் செல்லும் இந்த எம்ப்பரர் பென்குவின்களின் அழகிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஆஸ்கர் விருதினை கொடுக்கலாம்.

→ 1 Commentபகுப்புகள்: குறிப்புகள்
குறிச்சொல்லிடப்பட்டது:

ஜுரம் வந்த ஒரு இரவில்

ஏப்ரல் 30, 2008 · 4 மறுமொழிகள்

ஜுரம் வந்தால் ஒரு சில வசதிகளும் உண்டு. என்னைப் போல் சோம்பேறியான மற்ற சில ஜீவன்களை வேலை வாங்கும் சந்தோஷம் என்றுமே கிட்டாது. வித்தியாசமான, சம்பந்தமே இல்லாத கனவுகளும் எண்ணங்களும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். சில பிரச்சினைகள். எதாவது ஒரு பாடல் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும், அதுவும் ஃபுல் வால்யூமில். நல்ல பாடலாக இருந்தால் பரவாயில்லை, சில சமயம் “ஊஊஊஊண்ண்ண்ண்ண்” என்று ஹிமேஷ் ரெஷ்மியாவின் பாடல் அதீத ஒலியுடன் ஓடி இம்சிக்கும்.

அப்படிப்பட்ட ஓர் ஜுரம் வந்த இரவின் ஒரு எண்ண ஓட்டத்தினை (கஷ்டபட்டு பேக் ட்ரக் செய்து) இங்கே பதிவு செய்கிறேன்.

முதுகில் யாரோ தட்டுகிறார்கள், ஆலிவ் தொண்டையில் இருந்து விழுகிறது, லிண்ட்சே லோஹன், மர்லின் மன்றோ, க்ளோனிங், நமீதா, சத்யராஜ், தந்தை பெரியார், வேதாத்ரி மகரிஷி, பொள்ளாச்சி, நா.மகாலிங்கம், ஆழியாறு, ஈஸ்ட்மேன் நிற திரைப்படங்கள், சிவாஜி, பிரபு, என்ன கொடுமை சரவணன், ட்விட்டர், ஐகாரஸ் பிரகாஷ், சுஜாதா, தமிழ் சினிமா ஸ்டெரச்சர் கேஸ், குருணைக் கஞ்சி, உப்பு, வளவு, மாறுகடை, வத்தராயிருப்பு, கடலூர், சிதம்பரம், ஆழ்வார், வேளுக்குடி கிருஷ்ணன், சாரு நிவேதிதா, ப்ரான்ஸ், ஐஃபில் டவர், டாவிஞ்சி கோட், ஆண்குறி, சின் சிட்டி, ஆம்ஸ்டர்டாம், ரவிட்ரீம்ஸ், வேட்பிரஸ், மாவீரர் தினம், ஜெர்மனி, மன்ஹய்ம், வாஸர்ட்ரும், பான்ஹாஃப், சுவையான சைனீஸ் பிஸ்ஸா கடை, மணமாக இருக்கும் ஒரு ப்ரெஞ்ச் உணவு, பெயர் ஞாபகம் வரவில்லையே, பிறை வடிவில் இருக்குமே, ம்ம்ம்ம்ம், டேய் சத்தம் போடாம தூங்குடா - இது என் நண்பன், அய்யோ ஞாபகத்தில் வந்து தொலைக்க மாட்டேங்குதே, சுடு தண்ணீர், மிளகு ரசம், அக்கார அடிசில், ஜிகர் தண்டா, பாதாம் கோந்து, கடல் பாசி, என் தொப்பை, ஹிரித்திக் ரோஷன் வரும் ஏதோ ஜட்டி விளம்பரம், வந்துடுச்சி ஞாபகத்துல வந்துடுச்சு க்ராய்ஸாந்த் (மணமாக இருக்கும் ப்ரெஞ்ச் நொறுக்ஸ்), மணம், பெர்ஃபூய்ம்: எ ஸ்டோரி ஆஃப் எ மர்டரர், டாம் டிக்வர், ரன் லோலா ரன், டவுன்ஃபால், டெர் உண்டர்காங், ஏங்கலா மெர்க்கல், ஏஞ்சலினா ஜோலி, டாட்டூ, ப்ரெண்டன் மெக்கல்லம், ஹர்பஜன், உராங்குட்டன், சிங்கப்பூர் நேஷ்னல் ஜூ, ஐ கம் கம் ஸீ லா பட் நோபடி தேர் லா, ஜொஹொர் பஹ்ரு, கெண்டிங் ஹைலேண்ட், ஃபுல்லர்டன் ஹோட்டல், குமட்டும் கிழக்கத்திய கடல் உணவு, எம் டிவி ரோடீஸ் 5.0, லோகஸ்ட் வறுவல், கணவாய், பூச்சி ஃப்ரை,….. இப்போது நான் என் வாஷ் பேசின் அருகில் இருக்கிறேன்.

→ 4 Commentsபகுப்புகள்: குறிப்புகள்
குறிச்சொல்லிடப்பட்டது: