பத்து உலகத்திரைப்படங்கள்

என்னை யாரும் ஒரு நாலு நல்ல உலக திரைப்படம் சொல்லுன்னு கேட்காவிட்டாலும், கருத்து கந்தசாமியாகிய நான் இங்கும் வந்து என் கருத்து சொல்லவேண்டிய நிலை. காரணம் ரவி. எனக்கு மிகவும் பிடித்த உலகத்திரைப்படங்கள் (இந்திய திரைப்படங்கள் தவிர்த்த மற்ற படங்கள் தான் இந்த இடத்தில் உலகத் திரைப்படம் என்று எண்ணுகிறேன்).

நான் அழைக்கும் மற்ற மூன்று பேர்:

Advertisements

Bernard Bate

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில், ரமேஷ் பிரபாவுடன் ஒருவர் அழகான தமிழில் உரையாடிக்கொண்டிருந்தார். பார்க்க வெற்றுநாட்டவர் போல இருந்ததால், அலுவலகம் கிளம்புவதை சற்றே தள்ளிப்போட்டுவிட்டு பார்க்கத்தொடங்க்கினேன். அந்த மனிதர், பெர்னார்ட் பேட் என்ற யேல் பல்கலைக்கழக பேராசிரியர். தமிழின் மேடைப்பேச்சு பற்றியும், திராவிட கட்சிகள் வந்த பிறகு அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், மிக அழகான தமிழில் (செந்தமிழ் அல்ல பேச்சுவழக்குதான்), ஆர்வத்தோடு கேட்கத் தூண்டுமாறு உரையாடிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன கருத்துக்கள் சில: 

  • திராவிடக் கட்சிகள் வந்த பிறகுதான் மேடையில் செந்தமிழில் பேச ஆரம்பித்தனர். மக்களுக்கு சற்றே அந்நியமான இந்த மொழிநடையே அவர்களின் வெற்றிக்கு ஒரு காரணமோ என்றெண்ணும் வகையில் மக்களிடம் மிக வரவேற்பு பெற்றுள்ளது.
  • டீக்கடை அரசியல் கலாச்சாரம் என்பது, மற்ற நாட்டு மக்களுக்கு மிகவும் புதிதானது, விசித்திரமானது. இங்குள்ள எழுத்தறிவில்லாத மக்கள் பல செய்திகளை, டீக்கடை விவாதம் மூலமாக மட்டு அறிந்து கொண்டுள்ளனர். ஒபாமா பற்றி நுணுக்கமாகவும், சிங்கள இனவாதம் பற்றியும் எழுத-படிக்க தெரியாத ஆட்டோ ஓட்டுநர்கள் கூட, தன்னிடம் ஆர்வத்தோடு விவாதிக்கின்றார்கள் என்று ஆச்சரியப்பட்டார்.

நானோ, ஆங்கில சொற்கள் பலவற்றை தவிர்த்து, சரளமாக பேசும் இவர் மொழிநடையைக்கண்டு வியப்பில் ஆழ்ந்திருந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை வந்து தமிழ் கற்றுக்கொண்டதாகவும், தமிழ் மொழியின் இனிமை தன்னை கவர்ந்தது என்றும் “என் இனிய தமிழ் மக்களே” என்று பாரதிராஜா போல குரல் மாற்றி பேசி, உங்களுக்கு பிடித்த உணவு எது என்ற கேள்விக்கு “ரஜினிகாந்த் ஒரு படத்தில் சொல்வாரே, அது போல “நேத்தி வச்ச மீன்குழம்பு” தான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றெல்லாம் அவர் கதைத்துக்கொண்டிருக்கையில் நான் எதனால் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

இவரைப்பற்றி இணையத்தில் தேடியதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிட்டின. சுந்தர ராமசாமியின் “அடைக்கலம்” , அம்பையின் ”வீட்டின் மூலையில் ஒரு சமையலரை” போன்ற சிறுகதைகளை, ஜாம்பவான் ஏ.கே.ராமானுஜனுடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். ”பண்பாட்டு அசைவுகள்” என்ற அருமையான கட்டுரைத் தொகுப்பு எழுதிய முனைவர். தொ.பரமசிவம் அவர்களின் மற்றொரு நூலான “அறியப்படாத தமிழகம்” தனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துக்கொண்டிருக்கிறார்.

இந்த உரையாடலின் வீடியோ கிடைத்தால் பிறகு பதிவு செய்கிறேன்.

எஸ்.இளையராஜா – திராவிட பெண்கள்

எனக்கு இயக்குநர் பாலுமகேந்திரா பிடித்து போன பல காரணங்களில் ஒன்று: அவருடைய முக்கியமான நாயகிகள் பலர் மாநிறம் அல்லது வெளுப்பு/சிவப்பு இல்லா நிறம் கொண்டவர்கள் (ஸ்ரீதேவி தவிர்த்து அர்ச்சனா, ரோகினி, ப்ரியா மணி, சரிதா போன்றோர்). மாநிறம் மற்றும் கருமையே திராவிட மக்களின் நிஜமான நிறம் என்ற மாற்றமுடியாத கற்பிதம் கொண்டவன் நான் (எந்த தியரினை அடிப்படையாகக் கொண்டு என்றேல்லாம் கேட்ககூடாது 🙂 ). ஆகையினால் அந்த நிறத்தின் மீது என்றும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.

ஆகையால் தான் Painting Exhibition on Dravidian Women என்ற அறிவிப்பினைப் பார்த்து குஷி அடைந்தேன். ஓவியக்காட்சி நடப்பதை தேடி அறிந்து, அங்கு சென்று ரசிக்கும் அளவுக்கு கலைத்தாகம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனால் இதை பார்த்தே தீரவேண்டும் என்று என் நண்பனை நச்சரித்து அழைத்துக் கொண்டு சென்றேன். லாவெல் சாலையில் இருக்கும் Abstract Art Gallery என்று அறிவிப்பில் படித்து, லாவெல் சாலையில் அப்படிப்பட்ட கேலரி இல்லை என்று அறிந்து பல்பு வாங்கிவிட்டு, அது கன்னிங்கம் சாலையில் உள்ளது என்று கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டறிந்து, கேலரிக்குள் நுழைந்தோம்.

எஸ்.இளையராஜா என்ற ஓவியர் வரைந்துள்ள திராவிட பெண்கள் பற்றிய ஓவியக்காட்சி அது. தமிழ்நாட்டில் கிராமத்தில் உள்ள பெண்கள், அன்றாட வாழ்க்கையின் சில நொடிகளை, realistஆக வரைந்துள்ளார். எனக்கு இந்த இம்ப்ரெஷனிஸ்மா, க்யூபிஸாமா, பாலிமார்ஃபிஸமா என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஓவிய அறிவெல்லாம் இல்லை. ஆம்ஸ்டர்டாமில் நான் பார்த்த ரெம்ப்ரான் (Rembrandt) காட்சியகத்தில் இருந்த, ரெம்ப்ரான் வரைந்த ஓவியங்கள் போல இவருடைய ஓவியங்களும் realisticஆக இருந்தது. இது நான் அறிந்தவரை oil painting வகை கிடையாது.

எங்களுக்கு அனைத்து ஓவியங்களும் மிகவும் பிடித்திருந்தது. உலை வைப்பதற்காக அடுப்பூதும் பெண், முற்றத்தில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும் சிறுமி, தன் சிறு குழந்தையினை ஜன்னல் அருகில் வைத்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அம்மா, பட்டுப்புடவை கனகாம்பர பூ அணிந்துக்கொண்டு படத்துக்கு போஸ் கொடுப்பது போன்ற ஒரு பெண் என்று சாதாரண வாழ்வின் நொடியினை அருமையாக ஓவியத்தில் பதிவு செய்திருந்தார். மிகவும் நிறைவான அனுபவம் அது. தூர நின்று பார்க்கும் போது ஜொலிக்கும் பட்டாடையின் அருகில் பார்த்தால் அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டே நிறங்களை, மஞ்சள் மற்றும் கொஞ்சம் அடர்த்தியான மஞ்சள், மற்றும் அதன் காண்ட்ராஸ்ட் (contrast) கொண்டு  பட்டு போன்ற ஒரு படிமம் வந்தது மிக அருமையாக இருந்தது. (எனக்கு இதற்கு மேல் ஓவியத்தை பற்றி எல்லாம் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை, ஆக நிறுத்திக்கிறேன் 🙂 )

 

 

 

நீங்கள் பெங்களூர்வாசி என்றால், ஓவியங்கள் பார்க்க விருப்பம் இருந்தால், கண்டிப்பாக இந்த ஓவியக்காட்சியினை காண பரிந்துரைக்கிறென்.

திராவிடப் பெண்கள் – எஸ்.இளையராஜா, (Dravidian Women – S.Elayaraja)

14 – மார்ச் – 2009 வரை,  அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் கேலரி (Abstract Art Gallery) , கன்னிங்கம் சாலை, பெங்களூர்

(சிக்மா மாலில் இருந்து வெகு சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது)

2009

கொஞ்சம் தாமதம் தான், இருந்தாலும் தப்பில்லை. 2009 என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற ஒரு அவா பட்டியல்.

  • பனிரெண்டு கிலோ குறைப்பு – 72 கிலோவுக்கு இந்த வருடம் முடியும் முன்பு அடையவேண்டும். முதுகுவலி மறுபடியும் ஹெர்னியா போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட இது தான் எளியவழி. அரிசி மற்றும் பால் சார்ந்த பொருட்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். கோதுமை, ராகி, சிவப்பு அரிசியினை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அரைகுறை ஏரோபிக்ஸினை இனி அடிக்கடி செய்யவேண்டும்.
  • கடன் அட்டையினை விட்டொழித்தல் – கிரெடிட் கார்ட் ஒரு சிக்கலான வஸ்து. பயன்கள் பல இருந்தாலும் கொஞ்சம் அதிகம் கையைகடிக்கும் தன்மை உள்ளது. இப்போது தான் டெபிட் கார்ட் பயன்படுத்தியே இணையத்தில் அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்ய முடியுதே.
  • 20 புத்தகங்களை முழுவதுமாக படித்து முடிக்கவேண்டும் – விட்டகுறை தொட்ட குறையாக பல புத்தகங்களும், பக்கம் பிரிக்காமல் கிடக்கும் பல புத்தகங்கள் என பல கிடக்கின்றன. அவற்றில் உள்ள இருபது புத்தகங்களை முழுமையாக படிக்கவேண்டும். Unofficially 20in2009ல் பங்கேற்கவேண்டும்.
  • கன்னட மொழியினை கற்றுக்கொள்ள வேண்டும் – பெங்களூர் வாசம் ஐந்து வருடம் ஆகப்போகின்றது ஆனால் இன்னமும் பேடா-பேக்குவில் இருக்கும் என்னுடைய கன்னடத்தினை சரிசெய்ய வேண்டும்.
  • 50 தரமான விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்குதல் (முன்பு போட்ட பட்டியலினை முடித்தல்) – கொஞ்ச நாட்களாக மனதில் இருந்த எண்ணம், நேற்று நான் பங்கேற்ற பெங்களூர் விக்கி பட்டறையின் மூலம் வலுவாகியுள்ளது.

பார்ப்போம் எப்படி தேறுகிறேன் என்று.

சினிமாவும் நானும்

முன்பு புத்தகம் இப்போது சினிமா. பிடித்த விதயத்தில் விளையாடுவது, கரும்பு தின்ன கூலி போல தான். விளையாட்டை துவக்கிய பிரகாஷுக்கும், என்னையும் ஆட அழைத்த பரத்துக்கும் நன்றி!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்று சரியாக நினைவு இல்லை. பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் நன்றாக நினைவில் உள்ளது. இன்னும் ஏதோ ஒரு சத்யராஜ் படம் (ஒரு சிறுவனை காப்பாற்றும் கதை என்று மங்கலான நினைவு) பார்த்ததும் நினைவில் உள்ளது. அதில் திகில் காட்சிப்போல் எதாவது வந்தால் என் தந்தை என் கண்களை மூடிவிடுவார், ஆகையால் அது இன்னும் நினைவில் உள்ளது.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

தமிழில்: பொய் சொல்லப் போறோம்
ஆங்கிலத்தில்: Dark Knight

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம்கொண்டான். கணினியில் பார்த்தேன். வசதியாக பாட்டு மற்றும் சண்டை காட்சிகளை ஓட்டிவிட்டு பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி. கல்லூரி படத்தின் இறுதிக்காட்சி. அது ஒரு கனாக்காலம் படத்தில் சில காட்சிகள்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

விஜயகாந்த் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றது. இளம் வயதில் சினிமாவில் நன்றாக காசு சம்பாத்திவிட்டு, வயதான பிறகு, கொஞ்சம் கூட களப்பணிகளில் ஈடுபடாமல், கயமைத்தனமாக மக்களை ஏமாற்றி, அரசியலில் நுழையும் பதர்களை மக்கள் பிரித்து அறிந்துகொள்வார்கள் என்று நம்பிய என் மடத்தனம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

மேட்ரிக்ஸ் போன்ற படத்திலிருந்து பல காட்சிகளை அல்வா செய்த “அந்நியனில்”, ஒரு காட்சி. ரவுடி கும்பலிடம் அடிவாங்கி அந்நியனாக எழும் அம்பி, புயல் போல சுழன்று தாக்குவார், ஆனால் அதேசமயம் மற்றவர்கள் சாதரணமான வேகத்தில் இருப்பார்கள். எப்படி இதை செய்தார்கள் என்று இன்றும் குழப்பம் தான். சிம்பிள் எடிட்டிங் நுட்பமா, இல்லை வெவ்வேறு லேயரா.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு. எல்லா வெட்டி சிறுபத்திரிக்கை வாசகர்கள் 🙂 போல தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்றவர்களின் புத்தகங்களையும் பத்திகளையும் வாசிப்பது உண்டு.

யமுனா ராஜேந்திரன், விஸ்வாமித்திரன் என்றால் கொஞ்சம் தள்ளி போய்விடுவேன். Some tortures are physical And some are mental, But the one that is both, Is dental. என்று சொல்வாராம் Ogden Nash. நானாக இருந்தால், பல் பிடுங்குவதற்கு முன்பு இவர்களுடைய பத்தியை உரக்கப் படிக்க சொல்வே. அனஸ்தீஸ்யா செலவு மிச்சம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

காலையில் தேநீர் சிற்றுண்டி கூட இல்லாமல் போகலாம். சன் ம்யூசிக் தொலைக்காட்சி பார்க்காமல் இருக்க ஏலாது. பள்ளி பருவத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகனாக இருந்து, கல்லூரி பருவத்தில் தீவிர இளையராஜா ரசிகனாக மாறி, இப்போது PB. சிறீனிவாஸ், சுசீலா எல்லாம் பிடித்துபோவதை பற்றி யோசிக்கும் போதுதான் தெரிகிறது எனக்கு வயதாகிவிட்டது என்று. குரங்கு கையில் மாலை, நறுமுகையே, அழகான ராட்சசியே பாடல்கள் மூலம் ஜாஸ், மிகச்சிறந்த செம்புலம் சேர்ந்த நீர்த்துளி உவமை, ரீதி கௌளை என்று பல சாளரங்களை திறந்துவிட்டதில் அறிமுகப்படுத்தியதில் தமிழ்ச்சினிமா இசைக்கு பெரும்பங்கு உண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய. நட்புவட்டத்திற்கும், p2p கண்டுபிடித்த Bram Cohenக்கும் நன்றி. பிடித்த படங்களைப்பற்றி எனக்கு சரியாக எழுத வரவில்லை. கதையினை முழுமையாக விவரித்து சில அம்சங்களை பற்றிய கருத்தினைக்கூறும் முறையும் பிடிக்கவில்லை.

நறுக்குத்தெறித்தது போல கருத்துக்களையும், அவதானிப்பினையும் எழுதும் கலை இன்னும் பிடிபடவில்லை.

இந்தியப் படங்களில் இந்தி சினிமாவும், தெலுகு சினிமாவும் அதிகம் பார்த்ததுண்டு. எல்லாரும் புகழும் வங்கம், மலையாள மொழி சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.

ரோஜர் எபட்டோ, ராஜீவ் மஸந்த் போன்ற திரைவிமர்சகர்களும், வலைப்பதிவு வட்டத்தில் (குறிப்பாக மதி, சன்னாசி, ரவி) பரிந்துரைக்கும் படங்களை பார்ப்பதுண்டு. எந்த மொழிக்கும் பாரபட்சமே கிடையாது. Horror படங்களை தவிர, மற்ற எல்லா வகையான படங்களும் பார்ப்பதுண்டு. Horror படங்கள் எனக்கு சுத்தமாக புரிவதும் இல்லை, அதை புரிந்துகொள்ள ஈடுபாடும் இல்லை.

பல படங்கள் தாக்கியுள்ளன. அது கொஞ்சம் பெரிய பட்டியல் தான். ஆனால் சமீபத்தில் மிகவும் தாக்கியது மஜித் மஜிதியின் Color of Paradise. அதில் வரும் இந்த வசனம் பல சமயம் அனிச்சையாக மனதில் வந்து அந்த காட்சி கண்முன் ஓடி கண்களை பனிக்கவைக்கிறது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நன்றாகவே இருக்கும் எனத்தோன்றுகிறது. என்னதான் கழிசடை படங்கள் பல வந்தாலும், நல்ல படங்களும் இப்போது குறையாமல் வருவது போல, எதிர்காலமும் இருக்கும் எனத்தோன்றுகிறது.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எதைப்பற்றி மக்களும் ஊடகங்களும் பேசிக்கொள்வார்கள். குறிப்பாக தமிழ்பதிவுலகம் எதைப்பற்றி பேசும், சாரு நிவேதிதா பற்றியா, ஐ.பி.எல் பற்றியா இல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றியா. மூன்று பதிவுக்குள் ஒரு பதிவு தமிழ்சினிமா பற்றி எழுதாதவர்கள் எல்லா என்ன எழுதி கிழித்திட போகிறார்களோ. தேவுடா. 🙂

நான் அழைக்கும் சிலர்:

சன்னாசி
ரவி
நாராயணன்
கண்ணன்

ரிச்சர்ட் லிங்க்லேட்டர்

ரிச்சர்ட் லிங்க்லேட்டர் என்ற பெயர் “ஸ்கூல் ஆஃப் ராக்” படம் பார்த்த போது தான் எனக்கு அறிமுகம். ஜாக் ப்ளாக்கும் சில வாண்டுகளும் சேர்ந்து ராக் இசைக்குழு ஆரம்பிக்கும் கதையினை ஜாலியாக எடுத்திருந்தார். ஒரிரு பிங்க் ஃப்ளாய்ட், வீ வில் ராக் யூ தவிர வேறு ஏதும் தெரியாத ராக் இசை அறிவிலியான எனக்கு ராக் ஹிஸ்டரி, பங்க், சைக்கடெல்லிக், ஆன்க்கோர் ( அப்படீன்னா ஃப்ரெஞ்ச்சில் ஒன்ஸ்மோர் ) போன்ற பதங்களை உதிர்க்க மிக எளிமையாக அறிமுகம் செய்திருந்தார். மேலும் இவரோட பெயர் சென்ஸஸ் ஆஃப் சினிமாவில் இடம் பெற்றிருந்தது. இதில் வந்தால் பெரிய பருப்பான இயக்குநர் என்று கேள்விப்பட்டு, மற்ற படங்களை தரவிரக்கம் செய்ய ஆரம்பித்தேன்.

Before Sunrise – வியன்னாவில் காலை எட்டு மணிக்கு ஸ்டீஃபன் தேவாலயத்தில் ஆரம்பித்தால், ஸிஸ்ஸி அருங்காட்சியகத்தில் தங்கத்தால் ஆன ஜட்டி தவிர மற்றது எல்லாம் இருப்பதை வாய்பிளந்து ரசித்துவிட்டு, ஸ்பானிஷ் குதிரையேற்ற பள்ளியில் குதிரை சாணி போடும் காட்சிகளை அறுபது யூரோ கொடுத்து பார்த்துவிட்டு, மதியம் நான்கு யூரோவில் பீட்ஸா மற்றும் கோக் குடித்துவிட்டு, பொடிநடையாக அங்கிருக்கும் மற்ற சில கடியான அருங்காட்சியகத்திற்கு சென்று விட்டு, அருகே உள்ள மாளிகை முன் நின்று ஆர்க்குட் ஆல்பத்தில் போட சில படங்களை எடுத்துக்கொண்டு, அங்குள்ள கடைவீதிகளில் இந்தியன் ரெஸ்த்தோரந்தில் “தால்-வாங்கினால்-சாதம்/சப்பாத்தி-இலவசம்” சாப்பிட்டுவிட்டு, வேகவேகமாக ரயிலேருவது தானே map-marking செய்யும் நமது “வெளிநாட்டு சுற்றுலா” பழக்கம்.

இதையெல்லாம் செய்யாமல், ரயிலில் சந்திக்கும் ஜேம்ஸ்-செலினா என்ற ஜோடி வியன்னாவில் ஒரு நாள் என்ன செய்கிறார்கள் என்பதை அழகாக காட்டியுள்ளார். நிஜ வாழ்க்கைக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறது இந்த திரைக்கதை. தனக்கு பிடித்தது, தனது பால்ய பருவம், தன் எண்ணங்கள் என இருவரும் சுவையாக பேசிக்கொண்டே இருப்பதை ஒரு voyeurஆக பார்க்கும்போது, ஏதாவது ஆங்கிலம் தெரிந்த ஐரோப்பா ஃபிகர் கிடைத்தால் இப்படித் தான் மடக்கனுமோ என்று தோன்றுகிறது (தமிழ்நாட்லயே ஒரு வழியும் காணோம் – மனசாட்சி). வெறும் உரையாடல்களை வைத்தே இவ்வளவு சுவாரஸ்யமாக படம் எடுக்கமுடியுமா என்று வியப்பாக இருக்கிறது. செலினாவாக வரும் ஜூலி டெல்ப்பி எளிமையாக ஆனால் கொள்ள்ள்ளை அழகாக இருக்கிறார். இறுதி க்ளிஷே: இரு நடிகர்களும் கதைமாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். லிங்க்லேட்டரின் மற்றோரு படமான Before Sunset அடுத்த வாரம் பார்க்கவேண்டிய பட்டியலில் முதலிடம். (தல சன்ரைஸ்ஸைவிட சன்செட் சூப்பர்ன்னு வேற சொல்லிட்டாரு)

அடுத்த முறை ஐரோப்பா செல்லும் போது ரயிலடிகளிலும், பூங்காக்களிலும் ஈருடல் ஒருமுகமாக இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் பொறாமை வராது, புன்னகை தான் பொறாமை மட்டும் வராது, புன்னகையும் தான்.

பின்குறிப்பு: இந்த படத்தில் வரும் காட்சி எந்த தமிழ் படத்தில் வந்துள்ளது என்று சரியாக பதில் கூறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, கனவில் ஜூலி டெல்ப்பி வந்து அருள்பாலிப்பாராக !

March of the Penguins

சமீபகாலமாக விவரணை படங்கள் மீது எனக்கு காதல்.   அதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். எனக்கு மிகவும் பிடித்த, மனதை தைத்து நின்ற “March of the Penguins“ல் துவங்குகிறேன்.

அண்டார்ட்டிக்காவில் பென்குவின்களோடு பென்குவின்களாக ஒன்பது மாதம் எலும்பை ஒடிக்கும் கடும்குளிரில் வாழ்ந்து படம்பிடித்துள்ளனர். நூற்றுக்கணக்கான் எம்ப்பரர் பென்குவின்கள் ஒரு இடத்தில் குவிந்து, அவைகள் தன்னுடைய துணையினை தேர்ந்தெடுத்து, குழந்தை ஈன்று, பிரிந்து செல்லும் ஒரு காதல் கதையினை அருமையாக பதிந்துள்ளனர்.

பருந்துகள் அண்டாத, பனிக்கட்டிகள் சீக்கிரம் உடையாத, கடலில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய தீவில் அனைத்து பென்குவின்களும் கூடுகின்றன. ஆண்களும் பெண்களும் இரண்டு மாதம் தத்தம் துணையினை தேர்ந்தெடுத்து காதல் செய்து முட்டை போடுகின்றது. அந்த முட்டை பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்து போகக்கூட்டும். அதை தன்னுடைய காலுக்கும் தொப்பைக்கும் நடுவில் வைத்து வெதுவெதுப்பாக வைத்திருக்கிறது பெண். முட்டை வந்தவுடன் மிகக் கவனமாக (பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்துவிடும்), ஆணிடம் அதை ஒப்படைத்துவிட்டு இரை தேடி நூறு கிலோமீட்டர் தொலை பயணம் மேற்கொள்கிறது. அதுவரை கடுங்குளிரிலும், பனிப்புயலிலும் முட்டையினை உண்ணாவிரதம் செய்துகொண்டே (முட்டையினை தன் தொப்பைக்கும் காலுக்கும் நடுவில் சுமந்து வெகு தூரம் செல்ல ஏலாது) அடைகாத்துக் கொண்டிருக்கிறது ஆண்.

இரண்டு மாதம் கழித்து, மீன்களை தன் வயிற்றில் நிரப்பிக்கொண்டு, தன் கணவனையும் குழந்தையினையும் தேடிக்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான பெண்களை, அதனுடைய குரலினை வைத்தே கண்டுபிடித்துவிடுகிறது. அதற்குள் முட்டை பொறிந்து குட்டி பசியோடு தயாராக இருக்கிறது. தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு தன் உண்ணாவிரதத்தை முடிக்க நூறு மைல் தாண்டி செல்கிறது ஆண்.

தன் வயிற்றில் இதுவரை தேக்கி வைத்திருந்த உணவினை தன் குட்டிக்கு தந்து, குளிரில் தன் குட்டியினை இழந்த கோபமான அம்மா பென்குவின்களிடமிருந்தும், இரைதேடி அலையும் பருந்துகளிடமிருந்தும் தன் குட்டியினை காப்பாற்றி, உண்ணாவிரதத்தினை முடித்துவிட்டு வரும் தந்தையினை அதனுடைய குரல் மூலம் அடையாளம் காட்டி, நன்றாக நடக்க ஆரம்பித்தவுடன் “ராஜா, இனிமேல் பொழச்சுக்கவேண்டியது உன் சாமார்த்தியம்” என்று தன்னுடைய பயணத்தை தொடரும் இந்த பென்குவின்களின் கதைக்கு முன்னாடி மற்ற கதையெல்லாம் சப்பை. தன்னுடைய பெருத்த உடலினை இருபக்கமும் ஆட்டிக்கொண்டும், சில சமயம் தன் தொப்பை மூலம் பனியில் சறுக்கிக் கொண்டும் செல்லும் இந்த எம்ப்பரர் பென்குவின்களின் அழகிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஆஸ்கர் விருதினை கொடுக்கலாம்.